எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை: நடிகர் விஜய்

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் அனலடிக்கத் துவங்கிவிட்டது எனலாம். இந்த முறை தி.மு.க vs அ.தி.மு.க என்ற இருமுனை போட்டியைத் தாண்டி, மூன்றாவதாகவும் ஓர் அணி களம் காணும் என்றே தெரிகிறது. கமலின் ம.நீ.ம மூன்றாவது அணி அமைக்கத் தயார் என்று அறிவித்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை இன்னமும் குழப்பமாகவே இருக்கிறது.
இதனிடையே நேற்று ஒரு பரபரப்பு கிளம்பியது. நடிகர் விஜய் `அகில இந்தியத் தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் தன் அரசியல் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "இன்று எனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடர்பும் இல்லை எனத் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ரசிகர்கள், தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக அவர்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ, அந்தக் கட்சிக்காகப் பணியாற்றவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.