Tamil Swiss News

இலங்கைக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கைக்கு சுற்றுலா சென்ற சுவிஸ் நாட்டு யுவதி பாலியல் துஷ்பிரயோகம்!

இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேக நபரின் புகைப்படத்தை குறித்த யுவதிக்கு அடையாளம் காண்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குறித்த பொலிஸ் அதிகாரி பிரபாத் விதானகம இதனை தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கள்ட்ரீ பிரதேசத்தில் சுவிஸ் நாட்டு யுவதி ஒருவர் கடந்த 7ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து 4 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த புகைப்படம் ஒன்று பாதிக்கப்பட்ட யுவதிக்கு அடையாளம் காண்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதி தற்போது வெலிகம பகுதியில் இருக்கின்றார்.

இந்நிலையில், நாளைய தினம் யுவதியிடம் இருந்து பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக இரண்டு சந்தேகநபர்களின் புகைப்படங்களை அனுப்பியிருந்தோம்.

எனினும், பாதிக்கப்பட்ட யுவதியிடம் இருந்து எதிர்மறையான பதில்களே வந்தன. தற்போது மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது புகைப்படமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டி.என்.ஏ சோதனைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரினதும் இரத்த மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.