Tamil Swiss News

சுவிஸ் பிராங் எவ்வாறு நாணய அலகாக உருவானது ?

சுவிஸ் பிராங் எவ்வாறு நாணய அலகாக உருவானது ?

சுவிட்சர்லாந்தில் தற்பொழுதும் பிராங்க்கள் நாணய அலகாக பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் எவ்வாறு இந்த நாணய அலகு பயன்பாட்டுக்கு வந்த்து என்பது பற்றிய தகவல்களை நாம் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

நாம் பொருட்களை கொள்வனவு செய்தவற்கும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கும் சுவிஸ் பிராங்குகளை சுவிட்சர்லாந்து முழுவதிலும் பயன்படுத்திக் கொள்கின்றோம்.

எனினும் எப்போது எவ்வாறு இந்த பிராங்குகள் சுவிட்சர்லாந்தின் நாணய அலகாக உருவானது என்பது பற்றிய தகவல்களை நம்மில் பலர் அறியாமலும் இருக்கலாம்.

1848ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்கம் உருவானதுடன் புதிய அரசியல் சாசனம் உருவாக்கம் மற்றும் தலைநகர் தெரிவு என்பனவும் இந்தக் காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

சமஷ்டி அசராங்கம் உருவான போதிலும் கான்டன்களுக்கு மத்தியில் பல்வேறு அரசியல் முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வந்தன.

குறிப்பாக ஒவ்வொரு கான்டனிலும் ஒவ்வொரு பண அலகு பயன்பாட்டிலிருந்தமையினால் சுவிட்சர்லாந்து மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

உதாரணமாக சூரிச்சில் ducats, சுரில் batzen என ஒவ்வொரு கான்டனிலும் வேறு வேறு நாணய அலகுகள் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கான்டனுக்கு கான்டன் மாறுபட்ட நாணய அலகுகளினால் கொடுக்கல் வாங்கல் செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற காரணத்தினால் ஒரே நாணய அலகு அறிமுகம் செய்யப்பட்டது.

இவ்வாறு ஒரே நாணய அலகு அறிமுகம் செய்யப்படும் போதும் பிராங்குகளுக்கு ஒரு சில கான்டன்களும், guilder என்னும் நாணய அலகிற்கு சில கான்டன்களும் ஆதரவளித்தன.

மிக நீண்ட வாதப் பிரதிவாதங்கள் மற்றும் ஆய்வுகளின் பின்னர் இறுதியில் தற்பொழுது நடைமுறையில் காணப்படும் சுவிஸ் பிராங்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

1850ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் சட்டமொன்றின் மூலம் சுவிஸ் பிராங்குகள் தேசிய நாணய அலகாக அறிவிக்கப்பட்டது.