Tamil Swiss News

தடுப்பூசிகள் ஆறு மாத காலத்திற்கு மேலாகவும் நீடிக்கும்: சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை

தடுப்பூசிகள் ஆறு மாத காலத்திற்கு மேலாகவும் நீடிக்கும்: சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை
கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்திகாக இடப்படும் தடுப்பூசிகள் ஆறு மாதங்களுக்கும் மேலாகவும் நீடிக்கும் என்று சுவிஸ் சுகாதார அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அல்லது நோயிலிருந்து மீண்ட பின்னர் கொரோனா வைரஸ் நோய்க்கான எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்கள் நீடிக்கும் என்பது மருத்துவ சமூகத்தினரிடையே தற்போதுள்ள பொதுவான நம்பிக்கை. ஆனால் வைரஸுக்கான எதிர்ப்பு உண்மையில் நீண்ட காலம் நீடிக்கும் என சுவிஸ் பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் (FOPH) தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் வர்ஜீனி மஸ்ஸேரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில், "மருத்துவத்துறை நிபுணர்களுடன் நாங்கள் கிடைக்கும் தரவுகளைத் தொடர்ந்து விவாதிக்கிறோம். அவர்களின் தற்போதைய பார்வை என்னவென்றால், பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும். ஒருவேளை அது ஒன்பது முதல் பன்னிரெண்டு மாதம் வரையிலும் இருக்கலாம். அதற்கும் மேலாக இன்னும் நீண்ட காலமாகவும் இருக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

இதனால் ஜனவரி மாதம் தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்தில் தங்கள் தடுப்பூசிகளைப் பெற்ற மக்கள், கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.