Tamil Swiss News

குழந்தைகளுக்கும் வைரஸ் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை!

குழந்தைகளுக்கும் வைரஸ் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசனை!

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்காக, குழந்தைகளுக்கும் வைரஸ் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதிகமான சுவிஸ் மாநிலங்கள் தங்கள் தடுப்பூசி திட்டங்களை 16 வயது சிறுவர்கள் வரை விரிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டம் நிறைவு பெறுகையில் இளைய குழந்தைகள் தடுப்பூசித் திட்டத்தின் அடுத்த வரிசையில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தொடர்பான செயல்முறைகள் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், வரும் ஜூலை முதல் 12 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கும், இந்த ஆண்டு முடிவில் இருந்து 12 வயதுக்கு உட்பட்ட இளையவர்களுக்கும், நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்குவதற்கான திட்டம் உள்ளது. இருப்பினும், தடுப்பூசிகள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, 2022 வசந்த காலத்திற்கு முன்னர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊசிகள் போடுவதற்கான சாத்தியங்கள் எதிர்பார்க்கப்படவில்லை என்று பெடரல் கமிஷனின் தலைவர் கிறிஸ்டோஃப் பெர்கர் கூறினார்.

"தடுப்பூசி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கும் விரைவில் அணுகப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்" என்று பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் (FOPH) இயக்குனர் அன்னே லெவி தெரிவித்துள்ளார்.


12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இடுவதில் மிகுந்த கவனம் தேவை. பெரியவர்களைப் போலல்லாது, அவர்கள் தனித்தனியாக பரிசோதிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு வயதானவர்களை விட வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், வெவ்வேறு வயதினரைப் பொறுத்தவரை, வேறுபாடும் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் குழந்தைகளுக்கு வெறுமனே குறைந்த அளவு வழங்கப்படலாம், ஆனால் சரியான அளவு இன்னும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.