Tamil Swiss News

மே 11 அனைத்துப் பாடசாலைகளும், கடைகளும் திறக்கப்படும்! -சுவிஸ்

மே 11 அனைத்துப் பாடசாலைகளும், கடைகளும் திறக்கப்படும்! -சுவிஸ்

இன்றைய சுவிஸ் ஊடகமாநாட்டில் தற்போதைய நிலை மற்றும் முடிவுகள் பற்றி கூட்டாட்சி அரசுத்தலைவர் சிமொனெத்தா சமறூகா, சுகாதார அமைச்சர் அலேன் பேர்சே மற்றும் பொருளாதார அமைச்சர் கி பார்மலேன் ஆகியோர் முடிவுகளை தெரிவித்தார்கள்.

“நான்கு வாரங்களிற்கு முன் முதல் முடிவுகள் கொவிட்-19ஐ குறைப்பதற்காக எடுக்கப்பட்டன. தற்பொழுது மருத்துவமனைகளின் நெருக்கடி குறைந்து வருகின்றது. எனவே படிப்படியாக வழமைக்குத்திரும்புவதற்கான முடிவுகளை இன்று எடுத்துள்ளோம்.” என்று கூறி 16.04.20 (இன்று) ஊடகமாநாட்டை சிமொனெத்தா சமறூகா ஆரம்பித்தார்.

“ஏப்ரல் 27 சிகை அலங்கார நிலையங்கள்,பூக்கடைகள், பண்ணைகள்,அழகுசாதன நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை திறக்கப்படலாம். ஒவ்வொரு கடையும் திறக்கும் முன் தாங்கள் எவ்வாறு தொழிலாளர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க போகின்றார்கள் என்பதை முன்வைக்க வேண்டும். மே 11 அனைத்து கட்டாயப்பாடசாலைகளும், கடைகளும் திறக்கப்படும். இதை கண்காணிப்பது மிகவும் கடினம். எனினும் கண்மூடித்தனமாக நடப்பதை தவிர்க்க வேண்டும். யூன் 8 தொழிற்பாடசாலைகள், உயர்பள்ளிகள், அருங்காட்சியகங்கள், மிருககாட்சிசாலைகள் மற்றும் நூலகங்கள் திறக்கப்படும். இவையே நாம் படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகும் .” என சிமொனெத்தா சமறூகா மற்றும் அலேன் பேர்சே ஆகியோர் குறிப்பிட்டார்கள்.

“புதிதாக தொற்றேற்படும் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எனினும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அதுவே எமது இலக்கு. வேகமாக செயற்படுவதே எமது எண்ணம். எனினும் அவதானமாக செயற்படுவது அவசியம். வழமைக்கு சுவிஸ் திரும்புவது எமக்கு ஓர் நம்பிக்கையை தருகின்றது. நாம் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு கால் பதிக்கும் போது சுகாதார விதிமுறைகளையும், இடைவெளியை பேணுவதையும் கடைப்பிடிப்பதை மறந்து விடக்கூடாது.” என மேலும் அலேன் பேர்சே கூறி இருந்தார்.

தொழிற்கல்வியில் இறுதி ஆண்டில் கற்கும் மாணவர்களிற்கு பாடசாலைத்தேர்வுகள் நடைபெற மாட்டாது.பாடசாலைத்தேர்வுகளின் மதிப்பீடுகளிற்கு பதிலாக ஏற்கெனவே எழுதப்பட்ட தேர்வுகளின் மதிப்பீடுகள் சேர்க்கப்படும்.செயற்பாட்டுத் தேர்வுகள் இயலுமான வரை நடாத்தப்படும். இயலாத பட்சத்தில் தொழிற்கல்வி நிறுவனம் அனுபவப்புள்ளியை வழங்கலாம். அனைத்து மாநிலங்களிற்கும் இவையே விதிமுறைகளாகும். தொழிற்கல்வியை கற்கும் இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் கல்வியை முடிப்பது முக்கியமாகும். இல்லையெனில் இதனால் ஏறத்தாழ 75’000 மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தொழிற்கல்வி பயிற்சியளிப்பவர்கள் மாணவர்களோடு இணைந்து பேசி முடிவுகளை எடுப்பது முக்கியமாகும்.

“இதனைத்தொடர்ந்து கொவிட்-19 தொடர்பான ஆய்வை செய்வதற்கு கூட்டாட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கு 20 மில்லியன் சுவிஸ் பிராங் தேவைப்படுகின்றது. இதற்கு பல தகவல்கள் தேவை, இதற்காகவே இந்த ஆய்வு செய்வது பற்றி முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் ஒன்றாக செயற்படுவது பலம் என உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே நாங்கள் தொடர்ந்தும் ஒன்றாக தீர்வை எடுப்போம்.” என இறுதியாக கி பார்மலேன் கூறினார்.

மொழிபெயர்ப்பு: ர.நிதுர்ஷனா


Source: bag.admin.ch