கைவிடப்பட்ட நிலையில் சுவிஸ் முதியோர் இல்லங்கள் : கொரோனா அச்சுறுத்தல்

சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான முதியோர் காப்பகங்களில் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பாலான முதியோர் காப்பகங்கள் தற்போது கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.
Vaud மண்டலத்தில் செயல்பட்டுவரும் ஒரு முதியோர் காப்பகத்தில் மட்டும் கொரோனாவால் 6 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேலும் Vaud மண்டலத்தில் மொத்தமாக உள்ள முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 48 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
முதியோர் இல்லங்களில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை என்பதாலையே இறப்பு வீதம் அதிகரிப்பதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தொற்றுநோய் பரவும் இந்த காலகட்டத்தில், சுவிஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ள திட்டத்தின்படி, முதியோர் காப்பகங்கள் அனைத்தும் மூன்று மாத காலத்திற்கு அனைத்து வகையான பாதுகாப்பு அம்சங்களும் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே.
ஆனால் எந்த முதியோர் காப்பக நிர்வாகமும் அந்த அறிவுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் முதியோர் இல்லங்களுக்கு அளிக்கப்படும் வரை, மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே Friborg மண்டலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு பயன்படுத்தும் பாதுகாப்பக்கண்ணாடிகளை மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vaud மண்டலத்திலேயே குப்பைகளை சேமிக்கும் பிளாஸ்டிக் பைகளை பாதுகாப்புக்காக பயன்படுத்தும் நிலையில் இருப்பதாக நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் வலுப்பெற்றுள்ள நிலையில் பெடரல் அரசாங்கம் மற்றும் மண்டல நிர்வாகம் ஒன்றிணைந்து அனைத்து முதியோர் காப்பகங்களுக்கும் போதிய பாதுகாப்பு உதவிகளை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.