Tamil Swiss News

ஜெனிவா நகரில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

ஜெனிவா நகரில் இளம் பெண்கள் மீது கொலைவெறித் தாக்குதல்!

ஜெனிவா நகரில் 5 இளம் பெண்கள் மீது கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பெர்ன், பாஸல் உள்ளிட்ட 4 நகர மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சுவிட்சர்லாந்தில் பெண்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கடந்த 8 ஆம் திகதி புதன்கிழமை ஜெனிவா நகரில் செயல்பட்டுவரும் இரவு விடுதியின் வெளியே 5 இளம் பெண்கள் மீது சில ஆண்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான 5 பெண்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அதில் இருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும், கோமாவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து சுமார் 200 பேர் கொண்ட குழு ஒன்று ஜெனிவா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே வேளையில், பெர்ன், பாஸல் மற்றும் சூரிச் நகரங்களிலும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் நிலை குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ஜெனிவா இரவு விடுதியில் நடந்த அந்த தாக்குதலானது சமூக வலைதளத்திலும் எதிரொலித்தது.

பலர் கடும் கண்டங்களை தெரிவித்துள்ளதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறும் அதிகாரிகள், தொடர்புடையவர்களை இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


(image: nzz.ch)