இ-சிகரெட்டுகள் மீதான சுவிஸ் தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு..!

சுவிட்சர்லாந்தின் மத்திய நிர்வாக நீதிமன்றம் (FAC) நிகோடின் கொண்ட எலக்ட்ரானிக் சிகரெட்களின் விற்பனை மீதான தடையை நீக்கியுள்ளது.
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தால் (FSVO) விதிக்கப்பட்ட இந்த தடைக்கு எதிராக அளிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் மேல் முறையீட்டு மனுவின் விளைவாக இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த வகை தயாரிப்புக்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
"கடந்த செவ்வாய்க்கிழமை வெளிவந்த FAC இன் உத்தரவு, இ-சிகரெட்களுக்குத் தேவையான நிகோடின் உடன் கூடிய ஃப்ளாகான்ஸ் திரவங்களின் இறக்குமதி மற்றும் விற்பனையை உடனடியாக அமல்படுத்த அனுமதிக்கிறது," என FSVO இன் Judith Deflorin வெள்ளியன்று மாலை SRF க்கு தெரிவித்தார்.
சுவிஸ் வேப்பே வர்த்தக சங்கத்தின் தலைவரும், இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்ட InSmoke நிறுவனத்தின் இயக்குனருமான Stefan Meile, நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிப்பதாக தெரிவித்தார். இந்த தீர்ப்பு சுகாதார கொள்கை குறித்து அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான "சமிக்ஞை"யாக இருப்பதாக தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் இயற்றப்பட்ட புகையிலை தயாரிப்புகள் தொடர்பான புதிய சட்டத்தின் ஒரு பகுதியாக நிகோடின் உடைய இ-சிகரட்டை அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. இ-சிகரெட்டுகள் சாதாரன சிகரெட்டுகளைக் காட்டிலும் குறைவான அளவே தீங்கு விளைவிப்பதாக தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது.
தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2016 இல் சுவிஸ் மக்கள்தொகையில் 0.7% பேர் இ-சிகரெட்டுகள் அல்லது அதை ஒத்த தயாரிப்புகளை பயன்படுத்தினர். இதுவே 2013 ஆம் ஆண்டில் 0.4% ஆக இருந்தது.
(Image: www.swissinfo.ch)