Tamil Swiss News

சுவிஸ் அதிகாரியை மியான்மர் தூதராக நியமிக்கவிருக்கும் ஐ.நா...!

சுவிஸ் அதிகாரியை மியான்மர் தூதராக நியமிக்கவிருக்கும் ஐ.நா...!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் Antonio Guterres, மியான்மர் நாட்டுக்கு அவரது விசேஷ தூதராக பணிபுரிய சுவிஸ் தூதர் ஒருவரை நியமித்துள்ளார் என ஐ.நா. தரப்பு கூறியுள்ளது.

Christine Schraner Burgener தற்போது ஜெர்மனிக்கான சுவிட்சர்லாந்தின் தூதராக உள்ளார். அவரது புதிய நியமனம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் ஐ.நா. தரப்பு கடந்த புதனன்று செய்தி நிறுவனமான Reuters இடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டது.

2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரை தாய்லாந்திற்கான சுவிஸ் தூதராக Schraner Burgener பணியாற்றினார். அவருடைய கணவர் கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கான சுவிஸ் தூதராக இருந்தவர் ஆவார்.

மியான்மரில் நிகழ்ந்த ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்குப் பின் சுமார் 700,000 சிறுபான்மை ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு அகதிகளாக சென்ற விவகாரம் காரணமாக மியான்மர் மீது சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது. ஐ.நா., அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இந்த நடவடிக்கையை இன அழிப்பு என்று விவரித்தன, ஆனால் மியான்மர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை மியான்மர் நாட்டுக்கு ஒரு தூதரை நியமிக்க Guterres-ஐ கேட்டுக்கொண்டது. இந்த வார இறுதியில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மியான்மர் மற்றும் பங்களாதேஷுக்கு செல்கிறது.

ஐ.நா. பேச்சாளர் Stephane Dujarric, வரவிருக்கும் நாட்களில் Christine Schraner Burgener-இன் நியமனம் அறிவிக்கப்படுமென தாம் எதிர்பார்பதாக அவர் Reuters இடம் கூறினார்.

(Image: www.swissinfo.ch)