உச்சத்தை அடைந்த இயற்கை பேரழிவு காப்பீடு செலவுகள்..!

உலகின் மிகப்பெரிய மறு-காப்பீட்டு நிறுவனமான Swiss Re-வின்படி, இயற்கை பேரழிவுகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் ஏற்பட்ட சேதத்தை ஈடுகட்ட காப்பீட்டு நிறுவனங்கள் 144 பில்லியன் அமெரிக்க டாலர்களை (CHF138 பில்லியன்) செலவளித்துள்ளது. இது, 2016 ஆம் ஆண்டை விட $ 56 பில்லியன் அதிகம்.
சூறாவளி, காட்டுத்தீ மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட மொத்த இழப்புக்களின் மதிப்பு 337 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இது 2011 க்குப் பிறகு இரண்டாவது அதிகமான தொகை மற்றும் 2016 ஆம் ஆண்டை விட இருமடங்கு அதிகம். காப்பீட்டால் ஈடுசெய்யப்படாத தொகை 193 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, என ஜூரிச்சை சேர்ந்த இந்த நிறுவனம் அதன் வருடாந்திர சிக்மா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பேரழிவு நிகழ்வுகளில் சிக்கி கிட்டத்தட்ட 11,000 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர் அல்லது காணாமல்போயினர். இதில் இயற்கை பேரழிவுகளால் மட்டும் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.
கரீபியன் தீவுகள், போர்டோ ரிகோ மற்றும் அமெரிக்காவில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய சூறாவளிகள் ஹார்வி, இர்மா மற்றும் மரியா, 217 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியது. இந்த அழிவில் $ 92 பில்லியன் மட்டுமே காப்பீட்டினால் ஈடுகட்டப்பட்டது. பொருளாதார இழப்பு அடிப்படையில் 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கத்ரீனா, வில்மா மற்றும் ரீடா சூறாவளிகள் அதிக சேதத்தை ஏற்படுத்தின.
கலிஃபோர்னியா, கனடா மற்றும் போர்ச்சுகலில் நடந்த மிக மோசமான காட்டுத்தீ சம்பவங்கள் மற்றும் இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் $14 பில்லியன் அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தின. வெள்ளத்தால் கூட பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது, சீனாவின் யாங்ஸி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 2017 ம் ஆண்டில் ஆசியாவின் மிக மோசமான இயற்கை பேரழிவாக பதிவானது. இதனால் ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள்.
(Image: www.swissinfo.ch)