Tamil Swiss News

அமெரிக்க மரபணு சிகிச்சை நிறுவனம் AveXis ஐ $8.7 பில்லியனுக்கு வாங்குகிறது நோவார்டிஸ்..!

அமெரிக்க மரபணு சிகிச்சை நிறுவனம் AveXis ஐ $8.7 பில்லியனுக்கு வாங்குகிறது நோவார்டிஸ்..!

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் அமெரிக்க மரபணு சிகிச்சை நிறுவனமான AveXis ஐ $8.7 பில்லியனுக்கு (7.1 பில்லியன் யூரோ) வாங்குவதாக கடந்த திங்களன்று அறிவித்தது.

இரு நிறுவனங்களும் ஒருமனதாக இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்த AveXis நிறுவனம் ஒரு ஒற்றை மரபணுவில் ஏற்படும் ஒருவகை குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு அரிய நியுரோடிஜெனரேட்டிவ் நோயான தண்டுவட மஸ்குலர் அட்ரோபி (SMA) சிகிச்சைக்கான மருத்துவ ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

"இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை, உயர் திறன், முதல்-தர சிகிச்சைகள் மற்றும் நரம்பியல் விஞ்ஞானத்தில் நமது தலைமைத்துவத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகவும், அவற்றை மேலும் துரிதப்படுத்தவும் உதவும்," என நோவார்டிஸ் தலைமை நிர்வாக அதிகாரி வாஸ் நரசிம்மன் கூறியுள்ளார்.

நோவார்டிஸ், பிரிட்டனின் க்ளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்துடன் உள்ள தனது நுகர்வோர் சுகாதார கூட்டுப் பங்கை 13 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பதாக அறிவித்த இரண்டாவது வாரத்தில் இந்த கையகப்படுத்தும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த 36.5 சதவீத பங்குகளை விற்பனை செய்வது "அதன் முக்கியத்தும் பெற்ற வணிகங்களின் வளர்ச்சியில் மேலும் கவனம் செலுத்துவதற்கு" உதவும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், நோவார்டிஸ், அதன் முக்கிய இரண்டு மருந்துகளின் வலுவான விற்பனை 2017 ஆம் ஆண்டில் ஒரு "நல்ல செயல்திறன்" மாற்றத்தை வெளிப்படுத்தியதாக அறிவித்திருந்தது.

2017 ஆம் ஆண்டில் நிகர லாபம் 15 சதவீதம் அதிகரித்து 7.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

(Image: www.thelocal.ch)