Tamil Swiss News

தஞ்சம் கோரும் எத்தியோப்பியர்களை திருப்பியனுப்பும் சுவிஸ் ஒப்பந்தம் - கடுமையாக கண்டிக்கிறது ஒரு NGO..!

தஞ்சம் கோரும் எத்தியோப்பியர்களை திருப்பியனுப்பும் சுவிஸ் ஒப்பந்தம் - கடுமையாக கண்டிக்கிறது ஒரு NGO..!

சுவிஸ் நாட்டில் தஞ்சம் கோரி வந்த எத்தியோப்பியர்களை அவர்களது தாயகத்திற்கு திருப்பியனுப்பும் சுவிஸ் முடிவை அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமர்சித்துள்ளது. இதற்காக எத்தியோப்பிய உளவுத்துறையுடன் இணைந்து ஒத்துழைக்கும் இரகசிய ஒப்பந்தம் பற்றிய செய்தியை கடந்த வியாழக்கிழமை Tages Anzeiger செய்தித்தாள் வெளியிட்டது.

பல ஆண்டு இழுப்பறிக்கு பிறகு, எத்தியோப்பிய அரசாங்கம் புகலிடம் கோரி பிற நாட்டிற்கு செல்லும் மக்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. சுவிட்சர்லாந்து இந்த உடன்படிக்கைக்கு ஆதரவளித்துள்ளது, என அதன் குடியேற்ற அலுவலகம் Tages Anzeiger க்கு உறுதிப்படுத்தியது.

புகலிடம் கோரி சுவிட்சர்லாந்து வரும் பலரிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாததால், எத்தியோப்பிய இரகசிய சேவை மக்களை அடையாளம் காண உதவுவதாக ஒப்புக் கொண்டுள்ளது. அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சுவிஸ் அலுவலகம் அத்தகைய ஒத்துழைப்பை "சந்தேகத்திற்கு இடமின்றி மிகக் கடுமையான அடக்குமுறை" எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சுமார் 1,500 எத்தியோப்பியர்களும், அவர்களில் 300 க்கும் அதிகமானவர்கள் மீது நாடுகடத்துதல் வழக்குகளும் உள்ளன. இப்போதுவரை, புகலிடம் கிடைக்காத எத்தியோப்பியர்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவந்துள்ளது எத்தியோப்பியா. அந்த நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்சர்லாந்து என இவ்விரண்டும் கண்டித்தன.

கடந்த ஆகஸ்ட் மாதம், எரிட்ரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடிவந்தவர்களை மீண்டும் அவர்களது நாட்டிற்கே திருப்பியனுப்ப ஒரு சுவிஸ் நீதிமன்ற தீர்ப்பு வழிவகுத்தது. இது அந்த நாட்டிலிருந்து தஞ்சம் கோரி சுவிட்சர்லாந்திற்கு வந்த 3,200 மக்களை பாதிக்கலாம். பலர் தங்கள் வழக்குகள் பரிசீலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

(Image: www.swissinfo.ch)