Tamil Swiss News

சைபர் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கிறது சுவிஸ் நிதி கண்காணிப்பு நிறுவனம்!

சைபர் தாக்குதல்கள் பற்றி எச்சரிக்கிறது சுவிஸ் நிதி கண்காணிப்பு நிறுவனம்!

அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை சமாளிக்க சுவிட்சர்லாந்து பலவகையில் பயனுள்ள திட்டங்களை அமல்படுத்த வேண்டும், என சுவிஸ் நிதி கண்காணிப்பு நிறுவனம் FINMA எச்சரித்துள்ளது.

"இந்த தாக்குதல்களோடு தொடர்புடைய ஆபத்துகள் உலகளவில் அதிவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்துடன் இணைந்து வேகமாக அதிகரித்து வருகின்றன. சைபர் தாக்குதல்கள் தான் நிதியியல் முறை எதிர்கொண்டுள்ள மிக மோசமான செயல்பாட்டு அபாயங்களாகும், தனியார் துறை மற்றும் பொது அதிகாரிகள் என இருதரப்பினரும் இவற்றை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என FINMA வின் நிர்வாக இயக்குனர் மார்க் பிரான்சன் கடந்த செவ்வாயன்று வருடாந்திர செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கிகள் பல்வேறு இணைய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன. "Retefe" மால்வேர் இ-பேங்கிங் அமைப்புகளில், ஒரு நாளைக்கு சுமார் 100 முறை தாக்குதல் நடத்துகிறது என அவர் கூறினார்.

சைபர் பாதுகாப்பு மையங்களைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற பிற நிதி மையங்களை விட, பாதுகாப்பு வழிமுறைகளில் சுவிட்சர்லாந்து மிகவும் பின்தங்கி உள்ளதாக FINMA தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்தார்.

"நமக்கு ஒரு பொதுவான தளம் வேண்டும். அது பல்வேறு கிளைகளிலிருந்து நிபுணர்களை ஒன்றாக இணைத்து, நிதித்துறை வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும்," என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கிகள் தங்கள் நடவடிக்கைகளை அவுட்சோர்ஸ் செய்வது, குறிப்பாக பேக்-ஆபீஸ் நடவடிக்கைளை அவுட்சோர்ஸ் செய்வது ஹேக்கர்களுக்கு புதிய கதவுகளை திறப்பது போன்றாகும். இதனால் சைபர் குற்றங்களுக்கு எதிராக போராடுவது கடினமாகிறது என்கிறார் பிரான்சன்.

நிதி அமைப்பிற்கான அபாயங்கள் சைபர் குற்றங்களில் மட்டும் தான் உள்ளது என நினைப்பது தவறு. புதிய வியாபார மாதிரிகள், குறிப்பாக கிரிப்டோகரன்சி தொடர்பானவை, நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வாடிக்கையாளர்களை பாதிக்கும் அபாயங்களை உள்ளடக்கியுள்ளது என்று விளக்கினார்.

(Image: www.swissinfo.ch)