கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா விவகாரம்: சுவிட்சர்லாந்திற்கு பாதிப்பில்லை!

பிரிட்டிஷ் தரவு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா சுவிட்சர்லாந்தில் நிழல் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை, என மத்திய தரவு பாதுகாப்பு ஆணையர் சுவிஸ் பொது வானொலிக்கு கூறினார்.
சனிக்கிழமை ஒரு நேர்காணலில், அட்ரியன் லோப்சிகர், இந்த ஊழல் ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது போலத் தெரிகிறது என்று கூறினார். கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா சமூக ஊடக தளங்களில் இருந்து குறிப்பாக, பேஸ்புக்கில் இருந்து தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு ஹேக் செய்தது என்ற விவகாரம் தான் தற்போது உலகம் முழுவதிலும் புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட தரவுகள் தேர்தலில் சூழ்ச்சி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை, ஜூரிச் நகர தரவு பாதுகாப்பு அதிகாரி ப்ரூனோ பைரிஸ்வில், டேஜஸ் அன்சிகர் செய்தித்தாளிடம், இத்தகவல்களைப் பயன்படுத்தி வாக்காளர்களை தவறாகக் கையாளுதல் சுவிட்சர்லாந்தில் சாத்தியமானது என்று கூறினார். அடுத்த சுவிஸ் பொதுத் தேர்தலில் அத்தகைய முறைகள் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இருப்பினும், அந்த அபாயத்தை குறைப்பதற்கு ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக லோப்சிகர் தெரிவித்துள்ளார். தனிநபர் தரவுகளை ஓட்டுகளை பெற எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய விளக்கங்கள் சுவிட்சர்லாந்தின் அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன என அவர் சனிக்கிழமை அவரது நேர்காணலில் தெரிவித்தார்.
"அரசியல் மார்கெட்டிங் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
பெரிய சமூக ஊடகங்கள் மற்றும் இணைய பன்னாட்டு நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். சுவிஸ் மண்ணில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்கு பதிலளிக்க பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்வதற்கு இது உதவும்.
(Image: www.swissinfo.ch)