Tamil Swiss News

பெர்ன் பகுதியில் வெடிகுண்டு பீதி! ஒருவர் கைது

பெர்ன் பகுதியில் வெடிகுண்டு பீதி! ஒருவர் கைது
கடந்த வெள்ளியன்று சுவிஸ் தலைநகரின் புனித ஆவி தேவாலயத்தில் வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப்போவதாக ஆப்கனை சேர்ந்த இளவயது நபர் ஒருவர் அச்சுறுத்தியதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அந்நபரைப் பிடிக்க எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கையினால் பெர்ன் பகுதியின் ரயில் நிலையத்தை சுற்றி சுமார் ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் நடவடிக்கை முடிவடைந்தபின் அவர் கூறுகையில், பிற்பகல் நேரத்தில் பெர்ன் கண்டோனல் போலீஸிற்கு, தேவாலயத்தில் ஒரு நபர் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்துகொள்வதாகக் கூறி தகவல் வந்தது.

அவர்கள் அங்கு வந்தபோது, தேவாலயத்தின் உள்ளே 21 வயதான நபர் ஒருவர் மீது போலீஸார் சந்தேகத்திற்குரிய பொருட்கள் பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டனர். தேவாலயம் காலி செய்யப்பட்டு, அந்த இளைஞனை பிடித்த போலீஸார், மேலும் விசாரணைக்காக அவரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாலையில் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இரண்டு பொருட்கள் செயலிழக்கப்பட்டன. அந்நபர் வைத்திருந்த அவ்விரண்டு பொருட்களும் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. அவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கை வெளிவர சில நாட்களாகும் என போலீசார் தெரிவித்தனர்.

பெர்ன் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக சில மணிநேரம் மூடப்பட்டது. சில டிராம் மற்றும் பஸ் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் முழூ போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இரயில் சேவைகளுக்கு இடையூறு இல்லாமல் ரயில் நிலையத்தின் முக்கிய நுழைவு மூடப்பட்டது.

பாதுகாப்பு வளையம் வெள்ளிக்கிழமை மாலை நீக்கப்பட்டது, ஆனால் விசாரணைக்காக தேவாலயம் மற்றும் அதற்கு அடுத்துள்ள பகுதி முழுவதும் உடனடியாக மூடப்பட்டது. தேவாலயத்தில் பிடிபட்ட அந்த இளைஞன் மீது பொருத்தப்பட்டிருந்த பொருள்கள் பொதுமக்களுக்கு உண்மையில் ஆபத்தை அளித்ததா இல்லையா என்பதை போலீஸாரால் இன்னும் உறுதியாகக் கூற முடியவில்லை.