Tamil Swiss News

புதிய ஓய்வூதிய சீர்திருத்த வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது சுவிஸ் மத்திய அரசு

புதிய ஓய்வூதிய சீர்திருத்த வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது சுவிஸ் மத்திய அரசு

சுவிஸ் அரசு கடந்த வெள்ளியன்று, ஓய்வூதியத்திற்கு கூடுதல் நிதியளிக்க வாட் வரியை உயர்த்துதல், பெண்களின் ஓய்வூதிய வயதை 64 ல் இருந்து 65 ஆக உயர்த்துதல் போன்றவற்றை உட்பட்ட தேசிய அளவிலான ஒரு புதிய ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தின் திட்டவரைவை வெளியிட்டது.

முன்மொழியப்பட்டுள்ள இந்த சீர்திருத்தம், வாட் வரியை 1.7% வரை உயர்த்துவதன் மூலம் நிதியளிக்கப்பட உள்ளது. சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளை மேற்பார்வையிடும் உள்துறை அமைச்சர் அலய்ன் பெர்செட், கோடை கால இடைவெளிக்கு முன் சட்டமியற்றுபவர்களின் ஆலோசனையை பெற விரிவான திட்டவரைவை சமர்ப்பிக்க இருக்கிறார்.

பெர்செட் வழங்கிய முந்தைய ஓய்வூதிய சீர்திருத்த திட்டம் 2017 செப்டம்பரில் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது கடந்த இருபது ஆண்டுகளில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருக்கும் கட்டமைப்பு பற்றாக்குறையை அகற்ற சட்ட திருத்தம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட நான்காவது முயற்சியாகும்.

சமீபத்திய திட்டத்தின் கீழ், இந்த சீர்திருத்தம் அமலுக்கு வந்தபின் ஓய்வூதியம் பெறும் பெண்களின் வயது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக மூன்று மாதங்கள் உயர்த்தப்படும். இதன்மூலம் ஓய்வுபெறும் வயது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான மூன்று வகை விருப்பங்கள் பரிசீலிக்க்கப்பட்டு வருகிறது. அவை, வாட் ரசீதுகளால் நிதியளிப்பது அல்லது பணியாளர் சமூக காப்பீட்டு பங்களிப்புகளால் நிதியளிப்பது அல்லது இவை இரண்டும் கலந்த விதத்தில் நிதியளிப்பது.

62 மற்றும் 70 வயதுக்கு இடையில் அனைவரும் நெகிழ்வான பணி ஓய்வை தேர்வு செய்ய இயலும் என அரசு கூறுகிறது. எனினும் 65 வயதுக்குப் பின்னும் தொடர்ந்து பணியாற்ற யாரும் ஊக்கமளிக்கப்பட மாட்டார்கள்.