புதிய பாம்பார்டியர் (Bombardier) ரயிலின் முதல் பிரயாணம்

புதிய பாம்பார்டியர் ரயிலின் முதல் பிரயாணம்
பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின், 'எஃப்வி-டோஸ்டோ' என்ற இரட்டை-டெக்கர் ரயில் கடந்த திங்களன்று அதன் முதல் இரயில் பயணத்தை நிறைவு செய்தது. மற்ற 62 ரயில்களின் விதி, மாற்றுத்திறனாளி குழுவால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் மீதான நீதிமன்ற முடிவை சார்ந்தே உள்ளது.
திங்கள் முதல் பயணிகளை ஏற்றிச் செல்லவுள்ள 'எஃப்வி-டோஸ்டோ' பயணிக்கவிருக்கும் ஒரு பாதையில், புதிய ரயில்களில் ஒன்று, ஜூரிச் முதல் பென் வரை சென்றுவந்த பின்னர் சுவிஸ் நியூஸ் ஏஜென்ஸிக்கு பேட்டியளித்த சுவிஸ் மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் கின்சிக் "ஏவ்வித தாமதமும் இல்லை, அனைத்தும் நன்றாகவே நடந்தேறியது" என தெரிவித்தார்.
பம்பார்டியரால் தயாரிக்கப்பட்ட இந்த புதிய ரயில்கள் முதலில் 2010 ஆம் ஆண்டில் தயாரிக்க உத்தரவிடப்பட்டது. விநியோக பிரச்சினைகள், மென்பொருள் பிரச்சினைகள் மற்றும் ஒரு சுவிஸ் மாற்றுத்திறனாளிகள் குழுவின் சமீபத்திய வழக்கு போன்ற காரணங்களால் நீண்டகால தாமதம் ஏற்பட்டது. புதிய ரயில்களில் சக்கர நாற்காலி பயனர்கள் அணுக ஏற்றதாக இல்லை என கடந்த ஜனவரியில் 'இன்க்லூஷன் ஹேண்டிகேப்' சங்கம் ஒரு சட்டப்பூர்வமாக புகாரை அளித்தது.
அணுகல் பிரச்சினைகள்
பத்து நாட்களுக்கு முன்னர், ஆறு புதிய ரயில்கள் மட்டும் பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படலாம் என மத்திய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த முடிவை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம், அத்தோடு நின்றுவிடாமல், துணையில்லாமல் இந்தப் புதிய ரயில்களைப் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதையும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வமான சம வாய்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்தது.
இந்த இடைக்கால உத்தரவில், தற்போது இன்னும் தயாரிப்பில் இருக்கும் ரயில்கள் வருங்காலத்தில் பயன்படுத்தப் படலாமா வேண்டாமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், இந்த விஷயத்தில் சட்டபூர்வமாக ஒரு முடிவு எடுக்கப்படும் வரை சுவிஸ் மத்திய ரயில்வே அதன் ரயில் நெட்வொர்க்கில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது, .
சுவிஸ் மத்திய ரயில்வேயின் வரலாற்றில் மிக அதிக விலையுயர்ந்த தயாரிப்பு, பாம்பார்டியர் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 62 ரயில்களின் மதிப்பு CHF1.9 பில்லியன் ($ 2.4 பில்லியன்). சுவிஸ் மத்திய ரயில்வே இனி ஒவ்வொரு வருடமும் தனது ரயில்களை நவீனமயமாக்குவதற்காக CHF1 பில்லியன் ($ 1.6 பில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
(image: swissinfo.ch)