சுவிஸ் ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் 100 டன் சிகரெட் துண்டுகள் ஒவ்வொரு ஆண்டும் கண்டெடுக்கப்படுகின்றன!

ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் 100 டன் சிகரெட் துண்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன
சுவிஸ் மத்திய ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், ஒவ்வொரு ஆண்டும், ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் தூக்கி எறியப்படும் 100 டன் எடையுள்ள சிகரெட் துண்டுகளை கையாள வேண்டியுள்ளது.
உள் ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட இந்த தகவல்கள் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'சொன்டாக்ஸ் பிளிக்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவல்கள் ஆகியவை ரயில்வே நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டன. மேலும், நாடெங்கிலும் ரயில் நிலைய பிளாட்பார்ம்களை தினமும் சுத்தமாக வைத்திருக்க 1,200 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்தப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிகரட் சாம்பல் மற்றும் துண்டுகளை அகற்றுவதற்கென்றே பிளாட்பார்ம்களில் வைக்கப்பட்டிருக்கும் 6,371 தொட்டிகளை காலி செய்வதே அவர்களது பணியின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களையும் புகையில்லா நிலையங்களாக்க மத்திய ரயில்வே பரிசீலித்து வருகிறது. 12 மாத சோதனை திட்டத்தின் ஒரு அங்கமாக ஆறு சுவிட்சர்லாந்து நிலையங்களில் புகைப்பதற்கான வரம்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று வித புகைபிடிக்காத திட்டங்கள் முயற்சி செய்யப்படுகின்றன: முற்றிலும் புகையில்லா நிலையங்கள், ரயில் நிலைய பிளாட்பார்ம்களில் புகைபிடிக்கும் மண்டலங்கள் மற்றும் புகைப்பிடிக்கும் அறை. இவை ஆறு சோதனை நிலையங்களுக்கு இடையில் வேறுபடுகின்றன: பாசெல், பெல்லின்ஸோனா, சூர், நியூச்சடேல், நியோன் மற்றும் ஜூரிச் ஸ்டேடல்ஹோவன்.
ரயில்களில் புகைப்பிடிப்பது டிசம்பர் 2005 இல் தடை செய்யப்பட்டது, ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிலையங்களுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தில் மிகவும் தாராளமயமான புகைபிடித்தல் கட்டுப்பாடுகள் தான் உள்ளன. ரயில் நிலைய கட்டிடங்கள் புகையில்லா நிலையங்களாகிவிட்டன, ஆனால் பிளாட்பார்ம்களில் புகைப்பிடிக்க பயணிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படுகிறது.
(image: swissinfo.ch)