Halb-tax/Demi-tarif பாதி விலை பயணச்சீட்டுகள் பயன்பாடு ஒழிக்கப்படலாம்; ரயில்வே துறை அறிவிப்பு

சுவிட்சர்லாந்தின் பிரபலமான பாதி விலை பயணச்சீட்டுகள் பயன்பாடு ஒழிக்கப்படலாம் என்னும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் பயணச்சீட்டுகளின் விலை அதிகம். எனவே சலுகை விலை பயணச்சீட்டுகள் முறை ஒன்று பயன்பாட்டில் உள்ளது.
இதன்படி halb-tax/demi-tarif card என்னும் அட்டையை வைத்திருப்பவர்கள் ஆண்டொன்றிற்கு 185 பிராங்குகள் செலுத்தி பாதி விலை பேருந்து மற்றும் ரயில் பயணச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
சுமார் 2.5 மில்லியன் பயணிகள் இந்த சலுகை விலை பயணச்சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதற்கு இப்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதாவது ரயில்வே துறை இந்த முறையை ஒழிக்கப்போவதாகக் கூறியுள்ளது.
சலுகை விலை பயணச்சீட்டுகளை ஒழித்துவிட்டு அனைவருக்குமான முழு பயணச்சீட்டுகளின் விலையைக் குறைப்பதற்காக இவ்வாறு செய்யப்போவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சலுகை விலை பயணச்சீட்டுகளை விற்பதற்கு, மார்க்கெட்டிங் செய்வதற்கு மற்றும் புதுப்பிப்பதற்கு ஆகும் செலவு இனி குறையும். அது மட்டுமின்றி பெருந்தொகையான நிர்வாகச்செலவுகள் குறைக்கப்படுவதால் அதன் பலனை இனி மக்கள் பெறலாம்.
இவ்வாறு சலுகை விலை பயணச்சீட்டு முறையை ஒழிப்பதற்கு மொத்த ரயில்வே துறையின் ஒப்புதலும் தேவை.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பும் தோன்றியுள்ளது. பொதுப் போக்குவரத்து அமைப்பின் இயக்குநரான Ueli Stückelberger, முழு விலை பயணச்சீட்டுகளின் விலை அதிகம்தான் என்பதை ஒப்புக்கொள்வதோடு மட்டுமின்றி சலுகை விலை பயணச்சீட்டுகள் மிகப்பிரபலமாக இருப்பதால் அவற்றை ஒழிப்பது சரியல்ல என்றார்.
பயணிகளுக்கு உதவியாக உள்ள ஒரு விடயத்தை திடீரென்று நிறுத்துவதை ஏற்றுக்கொள்வது கடினம் என்றார் அவர்.
சலுகை விலை பயணச்சீட்டுகளை ஒழிப்பதால் மொத்தத்தில் பயணச்சீட்டுகளின் விலை குறையுமென்றாலும் அது பயணிகளிடம் மனோரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
இதேபோல் ஜேர்மனியில் சலுகை விலை பயணச்சீட்டுகளை திடீரென்று குறைத்தபோது மக்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
(Image: knoepfel.ch)