Tamil Swiss News

நைஜீரிய கடலில் சுவிட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - 12 மாலுமிகள் சிறைபிடிப்பு

நைஜீரிய கடலில் சுவிட்சர்லாந்து கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் - 12 மாலுமிகள் சிறைபிடிப்பு

நைஜீரிய கடலில் பயணம் செய்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து 12 மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரிச் :

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து துறைமுக நகரான ஹார்கோர்ட்டை நோக்கி சுவிர்சலாந்தை சேர்ந்த சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. கோதுமை ஏற்றிச்சென்ற அந்த கப்பல் நைஜீரிய கடலின் தென் கிழக்கில் உள்ள போனி தீவில் இருந்து 45 நாட்டிகல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.

தாக்குதலுக்கு பின்னர் கப்பலில் ஏறிய கடற்கொள்ளையர்கள் அதில் இருந்த 19 மாலுமிகளில் 12 பேரை சிறைபிடித்து சென்றுள்ளனர். இந்த தகவலை கப்பலின் கேப்டன் க்லாரஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடத்தப்பட்ட மாலுமிகள் 12 பேரும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்துள்ளது. எனினும் அவர்களின் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் எனும் தகவலை வெளியிடவில்லை.மேலும், கடத்தப்பட்டவர்களை விரைவாகவும், பத்திரமாகவும் மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக கப்பல் நிறுவனமும், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நைஜீரிய கடற்படையும் தெரிவித்துள்ளது.